வேட்பு மனுக்களில் விபரங்களை மறைத்ததாக ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு: நீதிமன்றத்தில் இன்று ஆவணங்கள் தாக்கல்

தேனி: தேர்தல் வேட்பு மனுக்களில் விபரங்களை மறைத்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனான தேனி எம்பி ரவீந்திரநாத்  ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளரான மிலானி, தேனி ஜூடிசியல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிச.30ம் தேதி புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், 2021 சட்டமன்ற தேர்தலில் போடியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களில் விபரங்களை மறைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த  தேனி ஜூடிசியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம், இப்புகார் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு  போலீசார் ஜன.10க்குள் வழக்குப்பதிந்து விசாரணை அறிக்கையை பிப்.7க்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும், தேனி தொகுதி அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். ரவீந்திரநாத் மீதான வழக்கில், கடந்த 22.3.2019 அன்று தேர்தல் அதிகாரியிடம் ரவீந்திரநாத் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, கொடுத்த சொத்து மற்றும் விபர பட்டியல்களில் கம்பெனி சம்பந்தப்பட்ட விபரங்கள், மற்ற விவரங்கள் தவறாக உள்ளன. அதன்பேரில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்  125ஏ இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, ஓ.பன்னீர்செல்வம் மீது 12.3.2021 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தபோது, தேர்தல் அதிகாரியிடம் கொடுத்த சொத்து மற்றும் விபர பட்டியல்களில், வங்கியில் கடனாக வாங்கப்பட்ட பண கணக்குகள், தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள், மற்ற விவரங்கள் தவறாக உள்ளன. இதன் பேரில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஏ இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்று காலை நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிப்.7க்குள் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.  ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, நீதிபதி உத்தரவின்படி புகார்தாரரான மிலானிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

Related Stories: