தன்னிச்சையாக சம்பள உயர்வு அறிவிப்பதா? பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் புகார்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற பெப்சியுடன், சம்பள உயர்வு குறித்து தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இன்னும் சில சங்கங்களிடம் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. இருதரப்பினரும் இன்னும் கையெழுத்திட்டு இறுதி செய்யவில்லை. அதற்குள், அதிக சதவிகிதம் சம்பள உயர்வு என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தன்னிச்சையாக அறிவித்துள்ளதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பள உயர்வு குறித்து பேசி இறுதி செய்தவுடன் தயாரிப்பாளர் சங்கமும், பெப்சியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தெரியப்படுத்துவோம். அதற்கு பிறகே சம்பள உயர்வு நடைமுறைக்கு வரும். அதுவரை, இன்று நடைமுறையில் உள்ள சம்பளத்தையே தயாரிப்பாளர்கள் வழங்க வேண்டும். கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றில் சிக்காமல் இருப்பதற்கான முகக்கவசத்தை படக்குழுவினருக்கு வழங்கி, தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, படப்பிடிப்புகள் மற்றும் பாடல், வசன ஒலிப்பதிவு உள்பட அனைத்து திரைத்துறைப் பணிகளையும் எச்சரிக்கையுடன் தயாரிப்பாளர்கள் கையாள வேண்டும்.

Related Stories: