முழு ஊரடங்கிலும் நடந்தது சைனிக் பள்ளி நுழைவு தேர்வு மாணவர்களுடன் குவிந்த பெற்றோர்: உணவு, தண்ணீர் இன்றி தவிப்பு

பீளமேடு: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதியில் இந்திய ராணுவம் நடத்தும் சைனிக் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 6 மற்றும் 9ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவு தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் மட்டுமே அந்த தேர்வுக்கு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன்படி, கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த தேர்வுக்காக மதியம் ஒரு மணி முதல் மாணவர்கள் மற்றும் பெற்றோர் நூற்றுக்கணக்கில் அங்கு திரண்டனர்.

இதில், கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பெற்றோருடன் திரண்டதால் அந்த பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நூற்றுக்கணக்கான கார்கள் பன்மால் சாலை, பீளமேடு, ஜி.வி.ரெசிடென்சி ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டன. இதனால், அந்த பகுதியில் மக்கள் கூட்டம் களை கட்டியது. நுழைவு தேர்வு எழுத வந்த மாணவர்கள் பள்ளிக்குள் சென்று விட்டனர். ஆனால், பெற்றோர் உள்ளே  செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், பள்ளிக்கு வெளியே குடிநீர், கழிப்பிட வசதி இன்றி பெற்றோர் அவதிக்குள்ளாகினர். மேலும், முழு ஊரடங்கு என்பதால் அங்கு ஓட்டல்கள் எதுவும் செயல்படாததால் மதிய உணவு கிடைக்காமலும் அவர்கள் சிரமப்பட்டனர்.

Related Stories: