திருவண்ணாமலை கோயிலில் 2 தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அதோடு பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வதால், கொரோனா தொற்று அபாயம் உள்ளது. எனவே இன்று முதல் அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான சான்றிதழ் அல்லது செல்போனில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் செல்லலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். மாட்டுப்பொங்கல் அன்று அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருவூடல் திருவிழா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்திற்குள் நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: