ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா கோயில் இடிப்பு: தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை: தஞ்சையில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா ேகாயிலை மாநகராட்சி நேற்று அகற்றியது. தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேலவீதி, தெற்குவீதி, வடக்குவீதி, கீழராஜவீதி மற்றும் தெற்கு அலங்கம் வீதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படுகிறது. இந்த சாலைகளில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு அதன் மீது நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக தஞ்சை பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மேலவீதி கொங்கனேஸ்வரர் கோயில் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘புரட்சித்தலைவி அம்மா ஆலயம்’ என்ற பெயரில் 2017ம் ஆண்டு முன்னாள் கவுன்சிலரும், கோட்டை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளருமான சுவாமிநாதன் என்பவரால் கட்டப்பட்டது.

ஒரு முறை இந்த வழியாக காரில் வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், காரில் இருந்தபடியே ஜெ. கோயிலை வணங்கி விட்டு சென்றார். இந்நிலையில் இக்கோயில் கழிவுநீர் கால்வாயை ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த கோயிலை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கால்வாயை ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த கோயில், பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று இடித்து அகற்றப்பட்டது.

Related Stories: