×

தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் மக்கள் கொரோனா விதிமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இன்றைய முழு ஊரடங்கு நிச்சயம் நல்ல பலனை தரும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினந்தோரும் 2,000 வீதம் தொற்றுகளின் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 10ஆயிரத்தை கடந்த நிலையில் இன்று 12,000ஆக அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் மக்கள் கொரோனா விதிமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும். 100% தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யா நலமுடன் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். தினந்தோறும் கொரோனா உறுதியாகும் மாதிரிகளை ஆய்வு செய்ததில் 85% s gene drop இருந்து கொண்டுள்ளது. 15% மட்டுமே டெல்டா என்ற அளவில் உள்ளது. s gene drop தொற்று பாதித்தவர்களில் 7 நாட்கள் அறிகுறி தெரியாமல் இருந்தால் அவர்கள் வீடுகளிலேயே தங்கி மருத்துவர்கள் ஆலோசனை படி சிகிச்சை பெற்று கொள்ளலாம். 60 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை தேவை படுகிறது. s gene drop பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. s gene drop பாதிக்கப்பட்டவர்கள் 90% பேர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள். எனவே உயிரிழப்பு இல்லாத நிலை உள்ளது. அந்த வகையில் இரண்டு தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவதும் அவசியமாகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அறிகுறி இல்லாமல் இருந்து, உடல்நிலை நலமாக இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளலாம். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என்கிற நிலை ஏற்படக்கூடாது. தற்போது மருத்துவமனைகளில் படுக்கை 7% மட்டுமே நிரம்பியுள்ளது. கட்டளை மையங்கள் மூலம் தொடர்பு கொண்டால் எந்த மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கைகள் உள்ளது என்பது குறித்த தகவல் அளிக்கப்படும். அதற்கேற்ப நோயாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த முறை கொரோனா பரவலின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவதும் விரைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஊரடங்கை அமல்படுத்தி பொருளாதார பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு செய்தே தீர வேண்டும் என்ற நிலையில் ஞாயிறு போன்ற ஒருநாள் ஊரடங்கு அவசியமாகிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு மூலம் சிகிச்சை பெற அனுமதி உள்ளது. தமிழகத்தில் மட்டுமே RTPCR சோதனை செய்வதற்கான செலவுகளை கூட இன்சூரன்ஸில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் ஆண்டு வருமானம் ரூ.70 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தற்போது அதனை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி முதல்வர் நாளை இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Tags : Corona ,Minister ,Ma. Subramanian , corona
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...