தமிழகத்திற்கு பாதிப்பு என்றால் மவுனம் மாநிலத்திற்கு மாநிலம் அணுகுமுறையில் மாற்றம்: ஒன்றிய அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு

கோபி: ஒன்றிய அரசு மாநிலத்திற்கு மாநிலம் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்கிறது. தமிழகத்தில் பாதிப்பு என்றால் மவுனம் காக்கிறது என முத்தரசன் குற்றம் சாட்டினார். கோபியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கட்டுமான பணியை பார்வையிட்ட கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது எனபதை அனைவரும் உணர்ந்து உள்ளனர். கடும் மழை, வெள்ள பாதிப்பு குறித்து மாநில அரசு, ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என பலமுறை கடிதம் எழுதியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தியும் இதுவரை ஒன்றிய அரசு ஒரு ரூபாயை கூட தமிழகத்திற்கு நிவாரண நிதியாக வழங்கவில்லை.

ஒன்றிய அரசு மாநிலத்திற்கு மாநிலம் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்கிறது. குஜராத்தில் ஒரு பாதிப்பு என்றால் அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் அறிவிக்கிறார். அதே நேரத்தில் தமிழகத்தில் பாதிப்பு என்றால், அது குறித்து மவுனம் காப்பதையே தொடர்ந்து பின்பற்றி வருகிறது. பாரபட்சமான, மாற்றாந்தாய் மனப்போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு முழமையாக உடனடியாக வழங்க வேண்டும். பாஜ ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத, வன்முறையில் நம்பிக்கை உள்ள, சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உள்ள,  பாசிசத்தில் நம்பிக்கை உள்ள கட்சியாக உள்ளது. காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் அக்கட்சியில் ஏற்கனவே இணைந்துவிட்டனர் என்றார்.

Related Stories: