×

கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவி உள்ளிட்ட 4 இடத்துக்கு 10,105 பேர் போட்டி: பிப்ரவரியில் தேர்வு முடிவு; டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

சென்னை: கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவியில் காலியாக உள்ள 4 பதவிக்கு நேற்று எழுத்து தேர்வு நடந்தது. மொத்தம் 10,105 பேர் இத்தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் பிப்ரவரி மாதம் மத்தியில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இத்தேர்வுக்கு போட்டி போட்டு கொண்டு 10,116 பேர் விண்ணப்பித்தனர்.

இதில் 11 பேர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 10,105 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் நடந்தது. சென்னையில் என்.கே.டி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 9 இடங்களில் இத்தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் 1 மணி வரை முதல் தாள் தேர்வும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. முதல் தாள் தேர்வில் 200 வினாக்களும், இரண்டாம் தாள் தேர்வும் 100 வினாக்களும் கேட்கப்பட்டிருந்தது. ேதர்வர்களை போலீசார் சோதனை செய்தனர்.மேலும் மாணவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் இருக்கிறதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் தேர்வு நடைபெற்ற மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டு தேர்வு பணிகளை கண்காணித்தனர். வேலூரில் நடைபெற்ற தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.மேலும் தேர்வு எழுதும் மாணவர்களிடம் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவிகளுக்கான தேர்வு காலை, மாலை என்று நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ரிசல்ட் பிப்ரவரி மத்தியில் வெளியிட டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்றார். தமிழ்நாடு நகர்  ஊரமைப்பு கட்டிடக்கலை, திட்ட உதவியாளர்  பதவிக்கான 4 காலி பணியிடங்களுக்கு 10,105 பேர் தேர்வு எழுதினர். இதனால், ஒரு பதவிக்கு 2526 போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Tags : DNPSC , 10,105 contestants for 4 places including Architecture, Project Assistant position: Exam results in February; Announcement by DNPSC Chairman
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்