கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றபோது டீக்கடையில் அமர்ந்து பள்ளி மாணவனுடன் சாதாரணமாக உரையாடிய முதல்வர்: வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சைக்கிளிங் சென்றபோது, டீக்கடையில் அமர்ந்து பள்ளி மாணவனுடன் உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது உடல் நலனில் எப்போதுமே மிகுந்த அக்கறை கொண்டவர். அதிகாலையில் வாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற பல்வேறு உடற்பயிற்சிகளில் அவர் தினந்தோறும் ஈடுபட்டு வருகிறார். வார இறுதி நாட்களில் சைக்கிளில் அதிகம் தூரம் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

வெளியூருக்கு கட்சி நிகழ்ச்சியாக சென்றாலும், அரசு நிகழ்ச்சியாக சென்றாலும் கூட அங்கு தங்கும் நிலை ஏற்பட்டால் காலையில் தனது உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொண்டு வந்தார். மேலும் வாக்கிங் சென்றவாறு மக்களிடம் குறைகளையும் கேட்டும் வந்தார். முதல்வரான பின்னரும் கடுமையான அரசியல் மற்றும் அரசு பணிகளுக்கு இடையேயும் தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல, உடற்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின். நேற்று காலை வழக்கம்போல கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். சைக்கிள் ஓட்டும்போது, அதற்கான உடை, கையுறை, ஹெல்மெட் அணிந்து மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டிச் சென்றார்.

அவர் சென்ற வழி நெடுகிலும் சாலையோரம் சென்ற பொதுமக்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு வணக்கம் தெரிவித்தனர். அவரும் சைக்கிள் ஓட்டியபடியே பதிலுக்கு வணக்கம் தெரிவித்து பயணத்தை தொடர்ந்தார்.

சில இடங்களில் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை வாங்கி, அவர்களோடு செல்பி எடுத்துக் கொண்டார். பயணத்தின் போது, மாமல்லபுரம் சாலையில் உள்ள தேநீர் கடையில் திடீரென அமர்ந்து தேநீர் அருந்தினார். முதல்வர் ஒருவர் சர்வ சாதாரணமாக சாலையில் உள்ள கடையில் அமர்ந்து தேநீர் அருந்துவதை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவருடன் பொதுமக்கள் சிலர் அமர்ந்து தேநீர் அருந்தினர்.

மேலும் மு.க.ஸ்டாலினுடன் அமர்ந்து செல்பியும் எடுத்து கொண்டனர். அப்போது பள்ளி மாணவன் ஒருவனுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது மு.க.ஸ்டாலின், ”ஆன்லைனில் படிக்கிறீர்களா?. எந்தப் பள்ளியில் படிக்கிறீர்கள்? அந்தப் பள்ளி எங்கிருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அந்த பள்ளி மாணவன், ”கோவளத்தில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறேன்” என்று பதிலளிக்கிறார். இதையடுத்து, ”6ஆம் வகுப்பு ஆன்லைனில் படிக்கிறாயா? பள்ளிக்கு சென்று விடுவாயா?” என்று கேட்கிறார். அதற்கு, ”ஆம். பள்ளிக்கு சென்று விடுவேன்” என்று பதிலளித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவனுடன் சர்வ சாதாரணமாக பேசிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Related Stories: