×

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதால் தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை: அனைத்துக்கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதால் தமிழகத்துக்கு நீட் நுழைவு தேர்வு தேவையில்லை என்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். நீட் விலக்கு மசோதா தொடர்பாக சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு கட்சி தலைவர்கள் அளித்த பேட்டி: செல்வபெருந்தகை (காங்கிரஸ்): இந்திய அரசியலமைப்பு சட்டப்படி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது 3 மாதத்திற்குள் கவர்னர் முடிவு எடுக்க வேண்டும். சட்டத்தின்படி இயங்குகிற ஆளுநர் என்றால் ஏன் 3 மாதங்களுக்கு பிறகும் வைத்திருக்கிறார். அதை அனுப்பாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றால், அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காத ஆளுநரை குடியரசு தலைவர் திரும்ப வேண்டும். குஜராத்திற்குள் நீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அன்றைய முதல்வர் தற்போதைய பிரதமர் மோடிதான் குரல் எழுப்பினார். மக்களுக்கு எதிராக செய்துவிட்டு, இன்று பாஜ வெளிநடப்பு செய்திருக்கிறது. தமிழகத்தில் எத்தனை குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். மக்களுக்கு எதிரான ஒரு இயக்கத்தை பாஜ நடத்திக் கொண்டிருக்கிறது. உடனே ஆளுநர் வேடிக்கை பார்க்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஜி.கே.மணி, (பாமக): தமிழகத்தில் நீட் தேர்வு வந்தபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில் நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பிறகு, அதன் மறுவடிவம்தான் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு. 12ம் வகுப்புக்கு அரசே பொது தேர்வு நடத்துகிறது. பள்ளி மாணவர்கள், மருத்துவ கல்லூரியில் சேர தமிழக அரசு நடத்தும் பொதுத்தேர்வே போதுமானது. நீட் தேர்வால் தமிழகத்தில் பயிற்சி மையங்கள் அதிகரித்துள்ளது. பணம் இருந்தால்தான் மருத்துவ கல்லூரிக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி எட்டாக்கனி ஆகிவிடும். இதனால் நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்.

சிந்தனைசெல்வன் (விசிக): தமிழக ஆளுநரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும், தமிழக எம்.பிக்களை சந்திக்காத உள்துறை அமைச்சர் அமித்ஷா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முன் வைத்தோம். தமிழக அரசு எடுக்கும் அனைத்து சட்ட போராட்டங்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும். நீட் தேர்வை பயன்படுத்தி, வணிக மையங்களில் கொள்ளை கட்டணத்தை நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அம்பலப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கட்டணமாக மாணவர்களிடம் வசூலிக்கிறது. இதை முறைப்படுத்த ஒரு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): நீட் மட்டுமல்ல, உயர் கல்வியில் சேர அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வால் அனைத்து மாணவர்களின் மருத்துவ கனவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாலி, (மார்க்சிஸ்ட்): சமூக நீதியின் விளை நிலமாக இருக்கும். தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை. இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 4 மாதமாகியும் கவர்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பாமல் உள்ளார். இது கண்டனத்திற்குரியது. தமிழக எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க முடியாமல் 5 நாளாக காத்து கிடக்கிறார்கள். இது எம்.பிகளை மட்டுமல்ல, தமிழக மக்களையே அவமதிக்கும் செயலாகும்.

வேல்முருகன், (தமிழர் வாழ்வுரிமை கட்சி): தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல் வேண்டும் என்றே காலம் கடத்தி வருகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சரை 3 முறை சந்திக்க சென்றும் பார்க்க முடியவில்லை. இது 8 கோடி தமிழர்களையும் அவமதிப்பதாகும். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தது போல, தமிழகத்தில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து புரட்சியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu does not need NEET selection as rural poor, simple students suffer: All party leaders comment
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...