×

தமிழகத்திற்கு பொது முழு ஊரடங்கு தேவை இல்லை கொரோனா மக்களுடன் கடைசி வரை பயணிக்கும்: தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல்

சென்னை: தமிழகத்துக்கு மீண்டும் ஒரு பொது முழு ஊரடங்கு தேவை இல்லை. கொரோனா வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். சென்னை, திருவான்மியூரில் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கான பேரியக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைக்கும் நிகழ்வில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்றின் முதல் அலையில் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தெரியாத சூழலில் பொது  முடக்கம் தேவைப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் மருத்துவ கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது முழு முடக்கம் தேவையில்லை. டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் நோய் பரவல் வேகம் நான்கு மடங்கு அதிகரித்தாலும் மருத்துவ சிகிச்சைக்கான தேவை குறைவாகவே உள்ளதால் கொரோனா 3வது அலை நோய்  பரவலை கட்டுப்படுத்த தமிழகத்திற்கு முழுமையான ஊரடங்கு தேவைப்படாது. தற்போதைய சூழலில் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக  கடைபிடித்தால் போதுமானது.

மேலும் 3வது அலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் உயிரிழப்பு பெரிய அளவில் கண்டறியப்படவில்லை, தடுப்பூசி செலுத்தும் பணிகள் உயிரிழப்பு குறைவிற்கு முக்கிய காரணம். எனவே, வயது முதிர்ந்தவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள் கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்வது நல்லது. வருங்காலங்களில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தொற்றா நோய்களை கண்டறியும் விதமாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு பாராட்டுக்குரியது. தடுப்பூசி செலுத்துவதால் பொதுமக்களுக்கு நிலையான எதிர்ப்பாற்றல் உருவாகினாலும் தொடர்ந்து வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. கொரோனா வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி  வரை பயணிக்கும்.இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் கூறினார்.

Tags : Tamil Nadu ,Corona ,Chief Scientist ,Sawmiya Swaminathan , Tamil Nadu does not need a public curfew Corona will travel with the people to the last: Chief Scientist Sawmiya Swaminathan
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...