×

நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வேளாண்மையை மேம்படுத்த இயந்திரமயமாக்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு, சர்க்கரை துறை ஆணையர் ஹர்மந்தர் சிங், உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண் வணிக துறை இயக்குநர் நடராஜன், வேளாண்மை துறை இயக்குநர் அண்ணாதுரை, வேளாண்மை பொறியியல் துறை பொறியாளர் முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேளாண்மை பொறியியல் துறையின் செய்திகள் மற்றும் திட்டங்களை விவசாயிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், விவசாயப் பெருமக்கள், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை இச்செயலியின் மூலம் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளவும் இயலும். மேலும், ரூ.50.73 கோடி மானியத்தில், விவசாயிகளுக்கு 2118 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் வழங்குதல், 230 வட்டார, கிராம மற்றும் கரும்பு சாகுபடிக்கேற்ற வாடகை மையங்கள் விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் நிறுவுதல் போன்ற வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, 5 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டது.

நடப்பு 2021-22ம் நிதியாண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் வழங்கும் திட்டம் மற்றும் விவசாயிகள் தங்கள் வருவாயை அதிகரிக்கவும், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திடவும், விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், தொழில்முனைவோர், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் வாடகை மையம் அமைக்கும் திட்டங்கள் ஒன்றிய, மாநில அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படுகிறது.

தனிப்பட்ட விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், நெல் நாற்று நடும் கருவி, நெல் அறுவடை இயந்திரம், வைக்கோல் கட்டு கட்டும் கருவி, ரோட்டவேட்டர், கரும்பு சோகை துகளாக்கும் கருவி, தென்னை ஓலை துகளாக்கும் கருவி, டிராக்டர் டிரெய்லர்கள், விசைக் களையெடுப்பான், புதர் அகற்றும் கருவி, தட்டை வெட்டும் கருவி மற்றும் தெளிப்பான் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியத்திலும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் www.agrimachinery.nic.in என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பித்து உரிய மானியம் பெறலாம்.

Tags : Chief Minister ,MK Stalin , Mechanization project to improve agriculture by introducing modern technologies: Chief Minister MK Stalin initiated
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...