×

மாநில சுயாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் நீட் தேர்வை நீக்க சட்டரீதியான நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை சிதைத்திடும், மாநில சுயாட்சி தத்துவத்தை சீர்குலைத்திடும் நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்டப் போராட்டத்தினை ஒன்றிணைந்து மேற்கொள்வதென முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடனான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் சார்பில், திமுக சார்பில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர் மற்றும் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வானதி சீனிவாசன் (பாஜ), ஜி.கே.மணி (பாமக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகைமாலி (மார்க்சிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), சிந்தனைச்செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார். அப்போது, இங்கே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஒரு வரைவு தீர்மானத்தை உங்களிடத்தில் எடுத்துரைப்பார்கள். நம் அனைவரின்  இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை காப்பாற்றிட வேண்டும் என்பதுதான். ஆகவே இந்த வரைவு தீர்மானத்தின் மீது தங்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை  வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற கட்சி தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர். அப்போது,  நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்குவதாக தெரிவித்தார்கள். பாஜ சார்பில் உரையாற்றிய வானதி சீனிவாசன், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி, அனைத்துக்கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானத்தினை நிறைவேற்றிட உடன்பாடில்லை என்று தங்களது கட்சியின் சார்பில் தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர், தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் கீழ்க்காணும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  மருத்துவ துறையில் தமிழ்நாடு இந்த நாட்டிற்கே முன்னோடியாக விளங்கி வருகின்றது. ஆனால் ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு திருத்த சட்டம் மற்றும் அதன்பிறகு கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்நிறுத்தி நமது மாணவர்களை பெருமளவில் பாதித்துள்ளது. மாநில அரசு நிதியில் இருந்து, மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டுவரும் மருத்துவ கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் எந்த முறையில்  சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.

ஒன்றிய அரசால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்குசிறப்பு பயிற்சிகளை பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும்,  மருத்துவர் மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளி கல்வியால் எவ்வித பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி பள்ளிக்கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும் இது மாணவர்களின் கல்வி கனவை சிதைப்பதாக மட்டுமின்றி, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் அமைந்து விட்டது. ஆகவே மாநில உரிமைகளை நிலைநாட்டிடவும், நம் மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றிடவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று ஒருமனதாக ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த சட்டமுன்வடிவினை மாநில ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது.

தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி முதல்வர் நேரில் சென்று ஆளுநரை சந்தித்து நீட் சட்டமுன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். மேலும் இது தொடர்பாக, கடந்த 28.12.2021 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், குடியரசு தலைவர் அலுவலகத்தில் சந்திக்க சென்ற நேரத்தில், அவரை சந்திக்க இயலவில்லை என்பதால் மனுவினை அவரது அலுவலகத்தில் அளித்து, அன்று மாலையே அம்மனுவும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து மேலும் வலியுறுத்திட, ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கோரி, பல நாட்கள் ஆகியும் சந்திக்க மறுத்து விட்டதால் அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய மனுவும் அவரது அலுவலகத்திலேயே கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் மறுத்தது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது என்று 6.1.2022 அன்று, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்து, இன்றைக்கு இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் நாம் ஏற்கெனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க அவரிடம் இருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத்துக்கட்சிகளின் சார்பில் அவரை சந்திக்கலாம் எனவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நாமும் நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூக நீதிக்கான அரசியல், சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலமே பெற்றுள்ளோம் என்ற அடிப்படையில், ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை சிதைத்திடும், மாநில சுயாட்சி தத்துவத்தை சீர்குலைத்திடும் நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்த பின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வது எனவும், நீட் தேர்வின் பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.


* மருத்துவ துறையில் தமிழ்நாடு இந்த நாட்டிற்கே முன்னோடியாக விளங்கி வருகின்றது.
* ஒன்றிய அரசின் நீட் தேர்வு திருத்த சட்டம், தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஆகியவை மருத்துவ மாணவர் சேர்க்கையில் நமது மாணவர்களை பெருமளவில் பாதித்துள்ளது.
* மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில், அம்மாநில மாணவர்களை சேர்க்க முடிவு செய்யும் உரிமையை ஒன்றிய அரசு பறித்துவிட்டது.

Tags : Chief Minister ,MK Stalin , Legal action to remove NEET selection that undermines the principle of state autonomy: Resolution at an all-party meeting chaired by Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...