உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

* பிப்.10- மார்ச் 7 வரை நடக்கிறது * உபி.யில் 7 கட்ட வாக்குப் பதிவு * மார்ச் 10ல் வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அடுத்த மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடக்கிறது. கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதையொட்டி, இம்மாநிலங்களில் வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இதற்கிடையே, ஒமிக்ரான் எனும் புதுவகை கொரோனா வைரசால், இந்தியாவில் 3ம் அலை ஏற்பட்டுள்ளது. பிப்ரவரியில் இது உச்சத்தை தொடும் என நிபுணர்கள் கணித்துள்ள சூழலில், 5 மாநில தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென உபி, உத்தரகாண்ட் உயர் நீதிமன்றங்கள் வலியுறுத்தின. ஆனால், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டாக 5 மாநில தேர்தல் முடிவுகள் கருதப்படுவதால், இத்தேர்தலை சந்திப்பதில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதனால், தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டியது.

இந்த 5 மாநிலங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, கொரோனா பரவல் தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சர், நிபுணர்கள், மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தார். தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தினார். கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 1 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ள நிலையில், 5 மாநில தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நேற்று அறிவித்தார். டெல்லி விஞ்ஞான் பவனில் அவர் அளித்த பேட்டி வருமாறு:கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றி 5 மாநில தேர்தல் பாதுகாப்பாக நடத்தப்படும். இது ஒரு சவாலான காலகட்டம் என்பதால் கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, கொரோனா சூழலை கருத்தில் கொண்டு வரும் 15ம் தேதி வரை பேரணி, பாதயாத்திரை, பொதுக்கூட்டம் போன்றவற்றில் எந்த கட்சிகளும் ஈடுபட கூடாது. டிவி, ஆன்லைன் மூலமாக அரசியல் கட்சிகள் டிஜிட்டல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் புது வசதி கொண்டு வரப்படுகிறது.

ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 690 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடத்தப்படும். உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7ம் தேதி வரையில் 7 கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும். மணிப்பூரில் பிப்ரவரி 27ம் தேதி, மார்ச் 3ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். இவற்றில் பதிவான வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த மாநிலங்களில் இன்று முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், 5 மாநிலங்களிலும் தேர்தல் களை கட்டத் தொடங்கி உள்ளது. தேர்தலையொட்டி, கடுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கான ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன.

மக்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு

காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா அளித்த பேட்டியில், ‘‘பாஜவை தோற்கடித்து, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், தலித்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு போன்றவற்றிற்கு முடிவு கட்ட, 5 மாநில தேர்தல் மக்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாகும். குற்றம் செய்தவர்களை தண்டிக்க விவசாயிகளுக்கும் கிடைத்துள்ள மகத்தான வாய்ப்பு இது,’’ என்றார்.

கட்டுப்பாடுகள்

* கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஜனவரி 15ம் தேதி வரை அரசியல் பேரணிகள், வாகன பேரணி, பாதயாத்திரை, சாலைப் பேரணி நடத்த தடை.

* வாக்குப்பதிவு கூடுதலாக ஒரு மணி நேரம் நடக்கும்.

* வேட்பாளர்களால் அதிகப்பட்சம் 5 பேருடன் மட்டுமே சென்று வீடு வீடாகச் தேர்தல் பிரசாரம் செய்யலாம்.

* தேர்தல் முடிவுகளுக்குப் பின் வெற்றி கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படாது.

* தேர்தல் பணியில் உள்ள அனைத்து ஊழியர்களும் இருமுறை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

* வேட்பாளர்கள் வேட்புமனுவை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம்.

* 80 வயது முதியவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தவாறு தபால் மூலம் ஓட்டுப்போடலாம்.

தேர்தலுக்கு முன்பாக ஒன்றிய பட்ஜெட்

5 மாநில தேர்தலுக்கு முன்பாக வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையாற்றி, பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட்டால் தேர்தலுக்கு இடையூறு ஏற்பாடுமா என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ‘‘பட்ஜெட் ஒட்டுமொத்த நாட்டிற்கானது. இதில் தேர்தல் ஆணையம் தலையிட விரும்பவில்லை. பட்ஜெட்டால் தேர்தலுக்கு எந்த இடையூறும் ஏற்படாது’’ என்றார்.

பாஜ மகத்தான வெற்றி பெறும்

தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது டிவிட்டரில், ‘ஜனநாயகத் திருவிழாவை வரவேற்கிறோம். மக்கள் ஆசியுடன், இரட்டை இன்ஜின் அரசின் சாதனைகள் அடிப்படையில், பாஜ மீண்டும் ஒரு மகத்தான வெற்றியுடன் ஆட்சி அமைக்கும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: