கடந்தாண்டு டிக்கெட் வாங்கியவர்கள் சொர்க்க வாசலை தரிசிக்க முடியாது: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைனில் 300 டிக்கெட், ஆன்லைன் மூலம் இலவச டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஏழுமலையான் கோயிலில் கடந்த நவம்பர் 18ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தனர். அப்போது, பெய்த கனமழையால் வரமுடியாத பக்தர்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், ஏழுமலையான் கோயிலில் வருகிற 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு, துவாதசியையொட்டி மேற்கண்ட 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், இந்த தேதிகளை தவிர மற்ற வேறு எந்த தேதியிலும் கடந்த நவம்பர் - டிசம்பரில் டிக்கெட் வாங்கிய பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: