மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: டிஜிபி சைலேந்திரபாபு பதக்கம் வழங்கினார்

கூடுவாஞ்சேரி: தமிழ்நாடு காவல்துறை சார்பில், மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கூடுவாஞ்சேரி அருகே ஒத்திவாக்கம் கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் பதக்கம் வழங்கும் விழா நேற்று நடந்தது. கூடுதல் டிஜிபி ஏ.அமல்ராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அதிதீவிர படைப்பள்ளி எஸ்பிக்கள் கே.பி.எஸ்.ஜெயச்சந்திரன், என்.டி.ரமேஷ், ஐஎஸ்எஸ்எப் நீதிபதி ஆர்.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு, துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற 250 பேருக்கு பாராட்டு சான்று மற்றும் பதக்கம் வழங்கினார்.  

இதில், மண்டலங்களுக்கு இடையே நடந்த போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தலைமை அணியும், மத்திய மண்டல அணியும் பெற்று சமமாக பிரித்து கொண்டனர். 2வது இடத்தை 2வது மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணியும், 3வது இடத்தை ஆயுதப்படை அணியும் வென்றன. மேலும் உயர் அதிகாரிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சிட்டி துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு முதல் பரிசும், கூடுதல் டிஜிபி அமல்ராஜிக்கு 2வது பரிசு, டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு 3வது பரிசு கிடைத்தது.

Related Stories: