×

கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை ஜோலார்பேட்டையில் எஸ்.பி திடீர் ஆய்வு- இளைஞர்களிடம் குற்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என அறிவுரை

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன், ஜோலார்பேட்டை தனிப் பிரிவு போலீஸ் திருக்குமரன், டிஎஸ்பி சாந்தலிங்கம், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உள்ளிட்ட போலீசாருடன் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியிலிருந்து ரயில் நிலையம், இடையம்பட்டி, கடைத்தெரு, ரயில்வே கோட்ரஸ், நாட்றம்பள்ளி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டார். மேலும் இந்த பகுதியில் படித்து விட்டு வேலை தேடி உள்ள இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி சமூக விரோத செயலில் ஈடுபடுவதை குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

அப்போது, பல்வேறு இளைஞர்கள் போலீசார் வருவதை கண்டு 100 மீட்டர் தொலைவிற்கு முன்பு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவது உறுதிபடுத்திவிட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என எஸ்பி அறிவுறுத்தினார்.

 பின்னர், ஜோலார்பேட்டை மினி விளையாட்டு அரங்கம் பகுதிக்கு எஸ்பி நடைபயணமாக ஆய்வு மேற்கொண்டபோது, போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த இளைஞர்களை பிடித்து விசாரித்தார். அப்போது அவர்களிடம் பீடி, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், ‘‘இதுபோன்ற போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் நிறுத்த வேண்டும். போதை பொருளை உட்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரை சமூகத்தில் கெடுக்க வேண்டாம்’’ என்று அறிவுறுத்தி சில விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

 அவர்களில் ஒருவரான கட்டெரி கேசர் வட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தாய்-தந்தையை இழந்தவர் என்பதும் அவர் வேலை வாய்ப்பற்று இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞருக்கு ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியிடம் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பிறகு அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு, ‘‘வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை முழுமையாக தவிர்த்து உங்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொண்டு பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.


Tags : SB ,Jolarpettai , Jolarpettai: Cannabis in various parts of Tirupati district including Kandili, Tirupattur, Jolarpettai, Natrampalli, Vaniyambadi
× RELATED பள்ளி மாணவ, மாணவிகள் போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு