×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஒன்றியங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள்-கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மேலப்புதுவயல் ஊராட்சி, வடக்கு துவரவயல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் கவிதா ராமு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் மேலப்புதுவயல் ஊராட்சியில் வடக்கு துவரவயல் அந்தோணியார் கோவில் அருகில் ரூ.3.88 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், நீர்பழனி ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், நீர்பழனியில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுப்பட்டுள்ளதையும், நீர்பழனி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதையும் கலெக்டர் கவிதா ராமு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் விராலிமலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு மாணவர் விடுதியினை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் மலைக்குடிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 15 முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள், அவ்வையார்ப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், மலம்பட்டி கிராமத்தில் பொது விநியோகத் திட்ட அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை கலெக்டர் வழங்கினார்.

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் கோத்திராப்பட்டி ஊராட்சி, மலைக்குடிப்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பெண்கள் வேலை செய்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இலுப்பூர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசு மாணவர் விடுதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவியர் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டு உணவு தயாரிக்கும் இடம், தங்கும் இடம், கழிப்பிடங்கள் சுகாதாரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வீரப்பட்டியில் தமிழ்நாடு முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.26,000 மதிப்பிலான வேளாண் இடுபொருட்களை கலெக்டர் வழங்கினார்.
இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராம், ஒன்றியக் குழுத் தலைவர் காமு.மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் சத்தியசீலன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pudukotta District , Pudukkottai: Pudukkottai District, Panchayat Union of Kunrondarko, Upper Puduvayal Panchayat, Northern Duvaravayal
× RELATED ‘அதிமுக-பாஜ கூட்டணி முறிவு காதலர்களின் தற்காலிக பிரிவு’