மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலத்தின் சுயாட்சியை ஒன்றிய அரசு பறித்துவிட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலத்தின் சுயாட்சியை ஒன்றிய அரசு பறித்துவிட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரவையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் துரைமுருகன், அதிமுக சார்பில் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன்,காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; பாஜகவை தவிர மற்ற 12 கட்சிகளும் நீட் விலக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநில மக்களும் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளனர். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பாதது சட்டமன்ற மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலத்தின் சுயாட்சியை ஒன்றிய அரசு பறித்துவிட்டது. நீட் தேர்வு 12 ஆண்டு பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக்குகிறது. நீட் தேர்வு, மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பது என கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக சட்ட வல்லுநட்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீட் விளக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை அனைத்துக்கட்சிகள் சார்பில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் விலக்கு தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.

Related Stories: