தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவை இல்லை; கொரோனா நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்.! உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி பேட்டி

சென்னை : கொரோனா 3ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் என்றும் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்,கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனுமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கக்கூடும். இதற்கிடையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தை தவிர்க்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலில் வைரஸை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், அவற்றை தடுப்பதாக நினைத்து பல நாடுகள் லாக்டவுன் அறிவித்தன. தற்போது நமக்கு அவற்றை பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால், நாம் லாக்டவுன் போட வேண்டிய அவசியமில்லை. ஒமிக்ரான் 4 மடங்கு வேகமாக பரவுகிறது. ஒமிக்ரான் பாதிப்பு குறைவாக தெரிந்தாலும், தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது நாம் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இதையும் கடந்துவிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: