×

குந்தாரப்பள்ளி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தம்-வியாபாரிகள் கவலை

கிருஷ்ணகிரி : குந்தாரப்பள்ளி சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை மந்தமாக இருந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் நேற்று மாட்டுச் சந்தை நடந்தது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு வந்தனர்.

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அதிக அளவில் மாடுகள் கொண்டு வரப்பட்டதால் விற்பனை மந்தமாக காணப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து மாடுகளை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.கர்நாடகாவில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் குறைந்த அளவே மாடுகள் விற்பனையானது. முன்பு ₹1 லட்சத்திற்கு விலை போன ஒரு ஜோடி மாடுகள், தற்போது ₹60 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

இளைஞர்கள் மத்தியில், ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், காளை மாடுகளை வாங்க வருகின்றனர். விவசாயத்திற்கு பயன்படுத்தும் மாடுகளும், பசு மாடு விற்பனையும் குறைந்துவிட்டது,’ என்றனர்.இதேபோல சந்தையில் திண்டுக்கல், ஒட்டன்சந்திரம், பழனி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சண்டை சேவல்கள் கொண்டு வரப்பட்டன. அதை வாங்க ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்தனர். இந்த சேவல்கள் ₹2 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று சந்தைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சண்டை சேவல்கள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

Tags : Kundarapalli , Krishnagiri: Farmers were worried as the sale of cows at Kundarapally market was sluggish yesterday. Pongal
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி களைகட்டிய...