×

ரூ.11 கோடி மதிப்பீட்டில் “நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் “நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்திப் பயிரானது, சராசரியாக 1.62 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, ஒரு எக்டருக்கு 411  கிலோ உற்பத்தித் திறனுடன் 3.92 இலட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 2000 நூற்பாலைகள் இயங்குவதால், நாட்டின் பருத்தி நூற்புத்திறனில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. உயர்தர பருத்தி உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், பருத்தி நூற்பாலைகளின் பெருகிவரும் தேவைகளைப்  பூர்த்தி  செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அவற்றில் மேலும் ஒரு சிறப்பம்சமாக, பருத்தி விவசாயிகளின் நலன்கருதி, ரூ.11 கோடி மதிப்பில் நீண்ட இழை பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 எக்டர் பரப்பளவில்  செயல்படுத்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம்  என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.1.2022) தலைமைச் செயலகத்தில், ஐந்து விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், நீண்ட, மிக நீண்ட இழை பருத்தி இரகங்களான எஸ்.வி.பி.ஆர்-5, எஸ்.வி.பி.ஆர்-6, கோ-14, சுரபி, சூரஜ் மற்றும் கோ-17 விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு கிலோ விதைக்கு ரூ.60 வீதமும்,

சான்று பெற்ற பருத்தி விதைகள் விநியோகத்தின் கீழ் கிலோவிற்கு ரூ.130 வீதம், எக்டருக்கு ரூ.1,300,  பருத்தியில் ஊடுபயிர் சாகுபடி செய்திட பயறு விதைகள் ஒரு எக்டருக்கு ரூ.500, பருத்தி நுண்ணுரங்கள் மற்றும்  திரவ உயிர் உரங்கள் ஒரு எக்டருக்கு ரூ.950, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான இடுபொருட்கள் ஒரு எக்டருக்கு ரூ.6,500, விசை களைக்கருவி ஒன்றிற்கு ரூ.47,000 மற்றும் தண்டு கூன் வண்டுகளை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு இடுவதற்கு எக்டர் ஒன்றிற்கு ரூ.5,000 வீதம்  மானியத்தில் பருத்தி விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் விருப்பமுள்ள சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டத்தினால் நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பருத்தி சாகுபடியினை 1.70 இலட்சம் எக்டர் ஆக உயர்த்தவும், பருத்தி மகசூலை ஒரு எக்டருக்கு 380 கிலோவிலிருந்து 430 கிலோ என்ற அளவிற்கு பஞ்சு மகசூலை உயர்த்தி, உற்பத்தியினை 4.30 இலட்சம் பொதிகளாக உயர்த்தவும் வழிவகை செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் / சர்க்கரைத் துறை ஆணையர் திரு. ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி  ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர்  திரு.சி.சமயமூர்த்தி,இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுரை,இ.ஆ.ப., வேளாண்மைப் பொறியியல் துறை தலைமை பொறியாளர் திரு.இரா.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.    



Tags : Chief Minister ,MK Stalin , Chief Minister MK Stalin has launched a new project called 'Sustainable Cotton Movement' at an estimated cost of Rs 11 crore
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...