×

கொரோனா பீதியிலும் 5 மாநில தேர்தலை நடத்த தீவிரம் பாஜ.வின் தந்திரம்-ஜனாதிபதி பதவிக்கு குறி வைத்து வியூகம்

2022ம் ஆண்டு, தேர்தல் ஆண்டாக இருக்கிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளன. அதைத் தொடர்ந்து, ஜூன்-ஜூலையில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள் நடக்க உள்ளன. அதோடு, 75 மாநிலங்களவை எம்பி.க்களுக்கான தேர்தல். ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் என அடுத்தடுத்து வரிசையாக தேர்தல் திருவிழா களைகட்ட உள்ளது.

தற்போது கொரோனா 3வது அலை இந்தியாவில் தொடங்கி விரைவில் உச்சத்தை அடைய உள்ளது. அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமான காலக்கட்டம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நேரத்தில் பொதுமக்கள் நலன் கருதி, 5 மாநில தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன. உத்தரகாண்ட், உபி உயர் நீதிமன்றங்களும் தேர்தலை ஒத்திவைக்கும்படி அறிவுறுத்தி உள்ளன. பெரிய அளவிலான பிரசாரங்களை காங்கிரஸ் ரத்து செய்துள்ளது.

ஆனால், இந்த தேர்தலை நடத்துவதில் பாஜ மட்டும் குறியாக உள்ளது. இதற்கு காரணம், பாஜ.வுக்கு விரோதமான மாநில கட்சிகளின் சட்டப்பேரவை பலம் அதிகரித்து வருவதும், விரைவில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலும், மாநிலங்களவை எம்பி.க்கள் தேர்தலும்தான் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் ஜூன் அல்லது ஜூலையில் நடத்தக் கூடும். இதில் எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். இதில் பாஜ சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பாஜ.வுக்கு அவசியமாகிறது.

தற்போது உத்தரப் பிரேதசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் சட்டப்பேரவைகளில் பாஜ.வின் முரட்டுத்தனமாக பலத்தில் இருந்தாலும், தேர்தல் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டால், சட்டப்பேரவைகளில் பதவிக்காலம் முடிந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால், எதிர்க்கட்சிகள் கை ஓங்கி விடும். ஒருவேளை எதிர்க்கட்சி தரப்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போன்ற தலைவர் ஜனாதிபதி பதவிக்கும் நிறுத்தப்படும் பட்சத்தில் திரிணாமுல், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஆதரவு அளிக்கும் என்பதால் பாஜ.வுக்கு இது இக்கட்டான சூழலை ஏற்படுத்தும்.

இதுதவிர, ஏற்கனவே மாநிலங்களவையில் பாஜ.வின் பலம் குறைவாக உள்ளது. அக்கட்சிக்கு 97 எம்பிக்கள் உள்ளனர். இதனால் எந்த ஒரு முக்கிய மசோதாவையும் மாநிலங்களவையில் நிறைவேற்றுவதாக இருந்தாலும், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானாவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜூ ஜனதா தளம், அதிமுக போன்ற கட்சிகளின் தயவை நம்பி உள்ளன. பாஜ தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பல கட்சிகள், ஏற்கனவே எதிர்க்கட்சிகளாக மாறி விட்ட நிலையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜூ ஜனதா தளமும் பாஜவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளன.

எனவே, மாநிலங்களவையில் மேலும் சிக்கல் ஏற்படாமல் இருக்க, இருக்கிற இடங்களையாவது தக்க வைக்க வேண்டுமென்பதே பாஜவின் முன்னுரிமை நோக்கமாக இருக்கிறது. இந்த ஆண்டில் காலியாக உள்ள 75 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியிடங்களில் பாஜ உறுப்பினர்கள் 26 பேர். இந்த எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள பாஜ விரும்புகிறது.
இவை அனைத்தையும் விட முக்கியமாக 2024 மக்களவை தேர்தலை குறிவைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் ஒருபுறமும், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஒருபுறமும் முயற்சிக்கின்றன.  ஏற்கனவே மேற்கு வங்கத்தில் வெற்றியை கோட்டை விட்ட பாஜ.வுக்கு உத்தரப்பிரேதச தேர்தல் வெற்றி மிக மிக முக்கியமானதாக உள்ளது.

ராமர் கோயில் கட்டுதல், காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் விஸ்தரிப்பு என இந்துக்களின் ஓட்டுக்களை கவர பாஜ வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. இதே சூட்டுடன் உபியை கைப்பற்றி விட பாஜ திட்டமிட்டுள்ளது. 403 உறுப்பினர்களை கொண்ட பெரிய மாநிலமாக உபி, தேசிய அரசியலுக்கு அடித்தளமாக இருப்பதால் கடந்த முறையை போல் 300க்கும் அதிகமான சீட்களை வென்று ஆட்சியை தக்க வைக்க வேண்டுமென்பதில் பாஜ உறுதியாக உள்ளது.

விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப்பில் பாஜவின் நிலை பரிதாப நிலையில் உள்ளது. அங்கு பிரதமர் மோடியின் பெயரை கூறினால் பாஜவுக்கு ஒரு ஓட்டு கூட விழாத கடும் அதிருப்தி நிலவுகிறது. எனவே, இந்த எதிர்ப்பு அலையை மழுங்கடிக்க உபியில் மகத்தான ஒரு வெற்றியை பாஜ விரும்புகிறது. அதன் காரணமாகவே, எவ்வளவு விலை கொடுத்தாவது 5 மாநில தேர்தலை நடத்துவதில் பாஜ குறியாக உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் எப்படி நடக்கும்?

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளில் இருக்கும் எம்பிக்கள் நாடாளுமன்றத்திலும், எம்எல்ஏ-க்கள் மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்களிப்பார்கள். இதன்படி மொத்தம் 776 எம்பிக்கள் (மக்களயைில் 543, மாநிலங்களவையில் 233 (நியமன எம்பிக்களுக்கு வாக்குரிமை இல்லை)), 4,120 எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். எம்பி., எம்எல்ஏக்களின் வாக்குகளின் மதிப்பைக் கணக்கிட்டு, புதிய ஜனாதிபதி அறிவிக்கப்படுவார். மொத்த மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903. இதில் பெரும்பான்மை எண்ணிக்கையைான 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 ஓட்டுக்களை பெறுபவர் புதிய ஜனாதிபதி ஆவார். வாக்குகளின் மதிப்பின்படி, உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 83,824 மதிப்பிலான வாக்குகள் உள்ளன.

* ஜனாதிபதி தேர்தல் ஜூன் அல்லது ஜூலையில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் 5 ஆண்டு பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.

* துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.

* 75 மாநிலங்களவை எம்பி.க்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடக்கும். அதிகபட்சமாக உபி.யில் 11, தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் தலா 6, பஞ்சாப், பீகாரில் தலா 5, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தானில் தலா 4 இடங்கள் காலியாக உள்ளன.

Tags : Paja ,Corona ,Wynn , 2022 is election year. Uttar Pradesh, Uttarakhand, Punjab, Goa and Manipur earlier this year
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...