×

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு தடை-கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன

நெல்லை : ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் நேற்று வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்.தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்டவைகள் இரவு 10 மணிக்கு மூடப்பட்டன. பொது இடங்களில் முககவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கிருமிநாசினி பயன்படுத்தவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை (9ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் வார இறுதி நாட்களாள வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால்  வழக்கமாக நடைபெறும் பூஜைகள் நடத்தப்படுகிறது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் முன்பகுதியில் ஒமிக்ரான், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையான நேற்று மசூதிகளிலும் தொழுகை நடத்தப்படவில்லை. இதற்கான அறிவிப்பு பலகை மசூதிகள் முன்பு வைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பிரசித்தி  பெற்ற உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயில் நேற்று மூடப்பட்டது.

ஆனால்,  சுவாமி, அம்பாளுக்கு வழக்கமான பூஜைகள் பக்தர்களின்றி நடத்தப்பட்டன. இதேபோல்  காரையாறு சொரிமுத்தையனார் கோயிலில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதைத்  தொடர்ந்து பாபநாசம் சோதனைச்சாவடி மூடப்பட்டது. பாபநாசம் கோயிலுக்கு செல்ல  வந்த தனியார் வாகனங்கள் அனைத்தும் டாணா பகுதியில் போலீசாரால்  நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. பாபநாசத்திற்கு செல்லும் அரசு  பேருந்துகள் மட்டும் டாணாவிலிருந்து அனுப்பப்பட்டன.

 களக்காட்டில்  பிரசித்தி பெற்ற சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோயில் மூடப்பட்டது.  கோயில் மூடப்பட்ட போதும் பக்தர்கள் இன்றி வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு  வருவதாகவும், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கோயில் மூடப்பட்டு, பக்தர்கள்  தரிசனத்திற்கு தடை விதிக்கப்படும் என்றும் அறநிலையத்துறையினர்  அறிவித்துள்ளனர்.  களக்காடு வரதராஜபெருமாள் கோயிலும் மூடப்பட்டது. மார்கழி  மாதத்தை முன்னிட்டு கோயில்களில் அதிகாலையில் நடத்தப்பட்டு வரும் பஜனை  நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் தென்காசி மாவட்டத்திலும்  பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாத சுவாமி கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண  சுவாமி கோயில்களும் மூடப்பட்டன. பக்தர்களின்றி வழக்கமான பூஜைகள்  நடத்தப்பட்டன. வெளியூர்களிலிருந்து சங்கரன்கோவிலுக்கு வந்த பக்தர்கள்  கோயில் வெளியில் நின்றபடியே சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயிலின்  முகப்பிலேயே விளக்கு போட்டு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர்.

நேற்று தூத்துக்குடி   மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன.   கோயில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டும் நடந்தன. பக்தர்கள் யாரும்   அனுமதிக்கப்படவில்லை. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற  சங்கரராமேஸ்வரர்  கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில் உள்ள பெரிய கோயில்கள்   அடைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள்   நடந்தன. மாநகரில் உள்ள பெரிய மசூதிகள், தேவாலயங்கள்   மூடப்பட்டிருந்தன. நகரில் பல்வேறு பகுதிகளில் சிறிய கோயில்கள் வழக்கம் போல   திறந்திருந்தன.

Tags : Nellai ,Thoothukudi ,Tenkasi , Monday: Echoing the Omigron spread, devotees were not allowed in places of worship on Fridays, Saturdays and Sundays.
× RELATED நெல்லையில் பிரதமர் மோடி இன்று பரப்புரை