×

கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி, பூங்காக்களுக்கு செல்ல 2 டோஸ் தடுப்பூசி சான்று கட்டாயம்

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியில் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்யவும், பூங்காக்களுக்கு செல்வதற்கும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் செல்வர்.

சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஏரியில் படகு சவாரி செய்வதற்கும், பூங்காக்களுக்குள் செல்வதற்கும் சுற்றுலாப்பயணிகள் 2  டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கும் சான்றிதழ்கள் காண்பிக்க வேண்டியது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது என படகு குழாம் மற்றும் தோட்டக்கலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மாஸ்க் அணிதல், கிருமிநாசினி உபயோகித்தல் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள நடைமுறைகளும் முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் மேலாளர் அன்பரசன் கூறியதாவது, ‘தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழக படகு இல்லங்களுக்குச் சென்று படகு சவாரி செய்யும் சுற்றுலாப்பயணிகள் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமென கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் ஏரியிலும் படகு சவாரி செய்பவர்கள், கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். சான்றிதழ் காண்பிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் கூட படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை’ என்றார்.

Tags : Kodaikanal , Kodaikanal, Tourist, Boat Ride, Vaccine Certification Mandatory
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...