×

கோவை தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புகள் திருட்டு? போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார்

கோவை: கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புகளை திருடுவதாக பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.  திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் பிரவீனா. இவர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது தாய்க்கு கடந்த ஏப்ரல் மாதம் காய்ச்சல் இருந்ததால் கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் அனுமதித்தோம். மே மாதம் வரை அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனது தாயின் உடல் நலம் எந்த நிலையில் உள்ளது என தகவல் கொடுக்காமல் ஒரு நாளுக்கு ரூ.70 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த கூறினர்.  

கடந்த மே மாதம் 3ம் தேதி எனது தாயை கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதேபோல், சில நோயாளிகளையும் அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் எனது தாய் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காரணம் இல்லாமல் எனது தாயை வேறு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். உடல் உறுப்புகளை திருடுவதற்காக வேறு இடத்திற்கு கொண்டு சென்றதாக மருத்துவமனையில் உள்ள சிலர் எங்களிடம் ரகசியமாக கூறினர்.  எனது தாயின் நகையும் காணாமல் போயிருந்தது. இது குறித்து கேள்வி கேட்ட என்னை மிரட்டி எனது செல்போனை உடைத்தனர். பின்னர், போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டியதோடு, என்னிடம் இருந்த ஆதாரங்களை அங்கிருந்த போலீசார் அழித்துவிட்டனர். பின்னர், மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் நிலையத்துக்கு வந்து, எங்களை கொலை செய்வதாக மிரட்டினர்.

இது குறித்து போலீசாரிடமும், சுகாதாரத்துறையிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. உடல் உறுப்பு திருட்டு நடக்கும் இந்த மருத்துவமனை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே  அந்த தனியார் மருத்துவமனையில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதாக கூறி அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது மருத்துவமனையை உடனடியாக மூடவேண்டும். புகார்களை வாங்க மறுத்து மிரட்டி பேரம் பேசிய போத்தனூர் போலீஸ் எஸ்ஐ முருகேஷை பணிநீக்கம் செய்ய வேண்டும். மருத்துவமனை மீதான புகார்கள் குறித்து உயர் மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Tags : Coimbatore ,Commissioner of , Organ theft at Coimbatore private hospital? Female harassment complaint at the office of the Commissioner of Police
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...