அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டையொட்டி காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்கல் தொடக்கம்

அலங்காநல்லூர்: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டையொட்டி, காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜன. 14, பாலமேட்டில் ஜன. 15, அலங்காநல்லூரில் ஜன. 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை, அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. அலங்காநல்லூர், பாலமேடு சுற்று வட்டார கிராமங்களில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, அவைகளின் வீடுகளுக்கே சென்று உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இப்பணியில் கால்நடை மருத்துவக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், நாட்டு காளைகளுக்கு மட்டுமே தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. மற்ற காளைகள் தகுதி நீக்கம் செய்யப்படுகிறது. மருத்துவ குழு ஆய்வில் காளைகளின் திமில் அளவு, வயது, கொம்பு உயரம், முதுகில் தழும்புகள் ஏதேனும் இருக்கிறதா என பரிசோதனை செய்கின்றனர். காளை உரிமையாளர்களும் தங்களது புகைப்படம், ஆதார், ரேஷன் கார்டு ஆகியவற்றை மருத்துவரிடம் சமர்ப்பித்தனர். இந்த பரிசோதனை முகாம் இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது. தகுதியுள்ள காளைகளுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Related Stories: