வேட்பு மனுவில் விபரங்கள் மறைப்பு ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: தேனி சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேனி: வேட்பு மனுவில் விபரங்களை மறைத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய, தேனி எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானி. இவர் தேனியில் உள்ள எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (ஜூடிசியல் நீதிமன்றம்) தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2019ம் ஆண்டு நடந்த எம்பி தேர்தலின்போது தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.ப.ரவீந்திரநாத் வேட்பு மனுத்தாக்கலின்போது விபரங்களை மறைத்துள்ளார்.

இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது,  போடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனுத்தாக்கலின்போது, விபரங்களை மறைத்து விட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார்.  இந்த மனு நேற்று தேனி ஜூடிசியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம், மனுதாரரின் புகாரின் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, வழக்கின் இறுதி அறிக்கையை பிப்.7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சாட்சி பாதுகாப்பு சட்டப்படி, மனுதாரர் உள்ளிட்ட சாட்சிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிப்.7ம் தேதிக்கு தள்ளி வைத்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும், தேனி தொகுதி எம்பியுமான ஓ.ப.ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: