×

ஐகோர்ட் கிளை உத்தரவை தொடர்ந்து மைசூரில் சேதமடைந்த நிலையில் இருந்த தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு மாற்றம்; தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்பு

மதுரை: ஐகோர்ட் கிளை உத்தரவை தொடர்ந்து, மைசூர் தொல்லியல் துறை அலுவலகத்தில் சேதமடைந்து அழிந்து வந்த தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு மாற்றப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பதற்கு வரவேற்பு பெருகியுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள ஒன்றிய தொல்லியல் துறையின் மண்டல அலுவலகத்தின் கீழ் கல்வெட்டுத்துறை இயங்குகிறது. இங்கு பழமையான கல்வெட்டுகள், பனை ஓலை, செப்பேடுகள் பாதுகாக்கப்படுகின்றன. தமிழர்களின் அரசியல், சமுதாயம் மற்றும் பண்பாட்டை அறிவியல்பூர்வமாக உறுதி செய்வதற்கான பல ஆதாரங்கள் இங்குள்ளன.

இங்குள்ள கல்வெட்டு துறை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டபோது, பல கல்வெட்டுகள் சேதமடைந்தன. போதிய பராமரிப்பின்றி, பாதுகாப்பின்றி இருக்கின்றன. இதனை பாதுகாத்திட இவற்றை உடனடியாக சென்னை தொல்லியல் துறை கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றவும், இங்கு கொண்டு வரப்படும் கல்வெட்டுகள் உள்ளிட்ட  ஆவணங்களை படிமம் எடுத்து டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தவும், தேவையான நிதியை ஒதுக்கவும் உத்தரவிடும்படி, மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த வக்கீல் மணிமாறன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், துரைச்சுவாமி கடந்த ஆக. 19ல் உத்தரவு பிறப்பித்தனர்.

இதில், மைசூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னை அலுவலகத்திற்கு 6 மாதத்திற்குள் மாற்றிக் கொண்டு வர வேண்டும். சென்னையின் தொல்லியல் கல்வெட்டு பிரிவு அலுவலகப்பெயரை, ‘‘தமிழ் கல்வெட்டியல் பிரிவு அலுவலகம்’’ என பெயர் மாற்றவும், காலிப்பணியிடம் நிரப்பி, வசதிகளை செய்து தரவும் உத்தரவிட்டனர்.  இந்நிலையில் மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்றும் உத்தரவை ஒன்றிய அரசின் ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா நிர்வாக துணை இயக்குநர் ஜெனா தற்போது பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை தமிழக தொல்லியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறும்போது, ‘‘‘‘அரை நூற்றாண்டுக் கனவு நனவாகிறது. ஐகோர்ட் கிளை உத்தரவில் இந்திய தொல்லியல் துறை மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்திருக்கிறது.  சென்னை அலுவலகம் இனிமேல் ‘‘தமிழ் கல்வெட்டு அலுவலகம்’’ என்று அழைக்கப்படும். வரவேற்கிறோம்’’’’ என்றார். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தலைவரும், கல்வெட்டு ஆய்வாளருமான ராஜகுரு, ‘‘இது சிறந்த முன்னெடுப்பு. பிரிட்டிஷ் காலத்தில் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் கூட, ஆவணமாக பதிவிடப்படாமல் இருக்கிறது. தமிழகத்திற்கு இந்த கல்வெட்டுகள் கொண்டு வரப்பட்டு, ஆவணப்படுத்தும்போது தமிழின் தொன்மை, பெருமை  மேலும் தெரிய வரும்’’’’ என்றார்.

Tags : Mysore ,Chennai ,ICC , high court Branch, Mysore, Tamil Inscriptions, Archaeologists
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...