×

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்படுள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 68 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 20ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் 19ம் தேதி சிறை பிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேரை கடந்த 5ம் தேதி மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து அவர்கள் தற்போது வரையில் கொழும்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களில் 12 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள், அவர்களின் படகு, உடமை உள்ளிட்ட அனைத்துக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுதொடர்பான ஒரு உத்தரவை ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அடுத்த ஓரிரு நாளில் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.

Tags : Tamil Nadu ,Sri Lanka Navy ,Supreme Court , Sri Lanka Navy, Captive, Tamil Nadu Fishermen, Supreme Court,
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...