×

பேர்ஸ்டோ அபார சதம்: ‘பாலோ ஆன்’ நெருக்கடியை தவிர்த்தது இங்கிலாந்து

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து போராடி வருகிறது. சிட்னி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (134 ஓவர்). அடுத்து  முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்திருந்தது. ஹசீப், கிராவ்லி இருவரும் தலா 2 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ஆஸி. வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஹசீப்  6, கிராவ்லி 18, கேப்டன் ஜோ ரூட் 0, மலான் 3 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து  21.5 ஓவரில் 36 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஜானி பேர்ஸ்டோ - பென் ஸ்டோக்ஸ்  இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். இருவரும் அடுத்தடுத்து அரை சதம் விளாசியதுடன் 5வது விக்கெட்டுக்கு 128 ரன் சேர்த்தனர். ஸ்டோக்ஸ் 66 ரன் (91 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி       லயன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த  ஜோஸ் பட்லர்  ‘டக் அவுட்டாகி’ ஏமாற்றமளித்தார். ஒரு முனையில் பேர்ஸ்டோ பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அதிரடியில் இறங்கிய மார்க் வுட் ‘பாலோ ஆன்’ நெருக்கடியை தவிர்க்க உதவினார்.

அவர் 41 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் லயன் வசம் பிடிபட்டார். இங்கிலாந்து தரப்பில்  இந்த தொடரின் முதல் சதத்தை   பேர்ஸ்டோ பதிவு செய்து அசத்தினார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்திருந்தது (70 ஓவர்).  பேர்ஸ்டோ 103 ரன், ஜாக் லீச் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. தரப்பில்  கேப்டன் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட் எடுத்தனர். கைவசம் 3 விக்கெட் இருக்க, 158 ரன் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து இன்று 4வது நாள் சவாலை சந்திக்கிறது.


Tags : Burstow ,England , Burstow, ‘Follow On’, England
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்