×

திருப்பதி கோயிலில் 14ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 14ம் தேதி பக்தர்களின்றி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. திருமலை அன்னமய்யா பவனில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் வழியாக பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக தலைமை செயல் அதிகாரி ஜவகர் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது: வருகிற 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி, 13ம் தேதி அதிகாலை 1:45 மணிக்கு நித்ய பூஜைகள் தொடங்கப்படும்.

வைகுண்ட ஏகாதசியன்று 4 மாட வீதியில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 14ம் தேதி வைகுண்ட துவாதசி நாளில் சுவாமி புஷ்கரணியில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பக்தர்களின்றி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். ஒமிக்ரான் தொற்றை கருத்தில் கொண்டு 48 மணிநேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி  2 டோஸ்கள் போட்டதற்கான சான்றிதழுடன் பக்தர்கள்  தரிசனத்திற்கு வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மாரடைப்பை தடுக்க சிறப்பு ஊசி
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் அஸ்வினி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு  மாரடைப்பு ஏற்பட்டால் ஐசிஎம்ஆர் மூலம் பரிந்துரை செய்து வழங்கிய, ‘எலாக்சிம்-40’ ஊசி தென்னிந்தியாவில் முதன்முறையாக நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில், தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா பேசியபோது, ‘‘மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு எலாக்சிம்-40 ஊசி போடுவதால் உயிரிழப்பு தடுக்கப்படும். 4 முதல் 5 மணி நேரம் கால அவகாசம் இருப்பதால் உடல் உறுப்புகள் பாதிக்காமல் பாதுகாக்கும். இந்த மருத்துவமனையின் கீழ் 100 கிமீ சுற்றளவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இந்த ஊசி அனுப்பி வைக்கப்படும்,’’ என்றார்.

மலைப்பாதையில் 11 முதல் அனுமதி
* சமீபத்தில் மழையால் சேதமான மலைப்பாதையில் நடக்கும் சீரமைப்பு பணிகள் வரும் 10ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, 11ம் தேதி பக்தர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது. இதில், கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
* பழைய ெகங்கையம்மன் கோயில் அருகே 7 ஏக்கரில் மலர் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இதில் இருந்து தினமும் ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பூஜைகள், அலங்காரங்களுக்கு 100 முதல் 150 கிலோ மலர்கள் எடுக்கப்பட உள்ளது. இதற்கான செடிகள் விரைவில் நடவு செய்யப்பட உள்ளன.

Tags : Chakratahlvar Tirthavari ,Tirupati Temple , Tirupati, Chakratahlvar, Tirthavari
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்