×

12ம் வகுப்பு ‘இம்ப்ரூவ்மென்ட் தேர்வு’ சர்ச்சை அதிக மதிப்பெண்களையே இறுதியாக கருத வேண்டும்: சிபிஎஸ்இ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்காக மாணவர்கள் எழுதும் தேர்வு ஆகியவற்றில் எதில் அதிக மதிப்பெண் பெறப்படுகிறதோ, அதையே இறுதியானதாக கருத வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றால், அதிக மதிப்பெண் பெறுவதற்காக மீண்டும் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். இது, ‘இம்ப்ரூவ்மென்ட் தேர்வு’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மதிப்பெண்களை கணக்கிடுவதில் சிபிஎஸ்இ நிர்வாகம் கடந்தாண்டு ஜூன் மாதம் மாற்றங்கள் செய்தது. அதன்படி, மாணவர்கள் எழுதிய 2 தேர்வுகளில் கடைசியாக எழுதிய தேர்வின் மதிப்பெண் மட்டுமே இறுதியானதாக எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற 11 மாணவர்கள், கடந்தாண்டு ஆகஸ்டில் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கான தேர்வை எழுதினர். ஆனால், முதலில் எழுதிய தேர்வை விட இந்த தேர்வில் அவர்கள் குறைவான மதிப்பெண்களையே பெற்றனர். இதனால், ‘இரண்டாவதாக எழுதிய தேர்வின் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், முதலில் எழுதிய தேர்வின் மதிப்பெண்களையே இறுதியானதாக எடுத்து கொள்ள வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த வழக்கில் நீதிபதிகள் ஏ.என்.கன்வீல்கர், சி.டி.ரவிக்குமார் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில், ‘புதிய தேர்வு மதிப்பீட்டு கொள்கையை நியாயப்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் சிபிஎஸ்இ முன்வைக்கவில்லை. எனவே, ஒரு மாணவர்  தான் எழுதிய 2 தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண் பெற்றாரோ அதையே இறுதியானதாக  எடுத்து கொள்ள வேண்டும். அதை தேர்வு செய்யும் உரிமையை மாணவர்களுக்கே வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப சிபிஎஸ்இ தேர்வு மதிப்பீட்டு கொள்கையை திருத்த வேண்டும்,’ என்று கூறிய நீதிபதிகள், சிபிஎஸ்இ.யின் புதிய தேர்வு மதிப்பீட்டு கொள்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,CBSE , Improvement Examination, Controversy, CBSE, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...