×

பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி விவகாரம்: சண்டிகர் ஐகோர்ட் பதிவாளரிடம் அறிக்கையை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி விவகாரம் தொடர்பாக சண்டிகர் ஐகோர்ட் பதிவாளரிடம் ஒன்றிய, மாநில, காவல்துறை, புலனாய்வு அமைப்புகள் அறிக்கையை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பில் குறைபாடு இருந்த காரணத்தால் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு தலைநகர் டெல்லி திரும்பினார். இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.

மூன்று நபர்கள் கொண்ட அந்த குழுவில் அமைச்சரவை செயலக பாதுகாப்புச் செயலாளர் சுதிர் குமார் சக்சேனா, உளவுத்துறையின் இணை இயக்குனர் பல்பிர் சிங், சிறப்பு பாதுகாப்பு குழு ஐ.ஜி சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழு விசாரணை நடத்தி அதன் அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக, மூத்த வழக்கறிஞர் மணிந்தர்சிங் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தில், பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க, இரண்டு பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை பஞ்சாப் மாநில அரசு அமைத்துள்ளது. இக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி, மாநில அரசின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குளறுபடிகள் இருந்ததா? என விசாரித்து மூன்று நாட்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மேற்கண்ட விவகாரம் தொடர்பான மனுவின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான மனுவிற்கு ஒன்றிய அரசு, பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள், பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் பஞ்சாப் - அரியானா மாநில சண்டிகர் உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரிலிடம் அறிக்கையின் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அவர் அதனை சீக்ரெட்டாக வைத்திருக்க வேண்டும்.

ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை குழுக்கள் வரும் திங்கட்கிழமை வரை எவ்வித விசாரணையும் மேற்கொள்ளக் கூடாது. தேசிய புலனாய்வு அமைப்பின் டிஜிபி மற்றும் சண்டிகர் டிஜிபி ஆகியோர் நோடல் அலுவலர்களாக நியமிக்கப்படுகிறார்கள். உயர்நீதிமன்ற பதிவாளருக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தேசிய புலனாய்வு அமைப்பை அதிகாரிகள் உதவிகளை செய்து தர வேண்டும்’ எனக் கூறி மனுவின் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Suprem Court ,Chandigar EyCourt Registrar , PM's security breach case: Supreme Court orders handing over of report to Chandigarh ICC registrar
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர்...