வார இறுதி நாட்களில் கோயில்கள் மூடல்: மீனாட்சியம்மன் கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு

மதுரை: கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடல் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இன்று அமலுக்கு வந்தது. இதனால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் ெசய்து விட்டு சென்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.

அதன் படி இன்று காலை முதலே மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம் முருகன், அழகர்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் கோயிலில் சுவாமிகளுக்கு பூஜைகள் நடந்தன. இன்று காலை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள், அம்மன் மற்றும் சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் கோயில் வாசல்களில் நின்று கும்பிட்டு விட்டு சென்றனர். இதே போல் தென் மாவட்டங்களில் உள்ள பழநி முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கோயில் ஊழியர்கள் மட்டும் அரசு நெறிமுறைகளை கடைபிடித்து கோயிலுக்குள் சென்று வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு கோயில்களில் அனுமதி இல்லாததால் நேற்று இரவு 10 மணி வரை மதுரை மீனாட்சியம்மன் மற்றும் பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories: