×

2021-22ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டில் ரூ3,720 கோடி நிதி ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்

சென்னை: 2021-22ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டில் ரூ.3,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2021-22ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசியதாவது: 2022ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை முன்வைக்கிறேன். துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.3,719.69 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன.

2021-22ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புது பணிகள் மற்றும் புது துணை பணிகள் குறித்து ஒப்பழிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறுவதும், எதிர்பாராத செலவு நிதியில் இருந்து, விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடாக செய்வதும், இத்துணை மானிய கோரிக்கையின் நோக்கமாகும். 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் கரும்பு   வழங்க கூடுதலாக ரூ887.67  கோடி அரசு அனுமதித்துள்ளது.

கொரோனா காலத்தின்போது  அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களின் நிவாரண நடவடிக்கையாக மளிகை பொருள் விநியோகத்தில் மீத தொகையான  ரூ.132.59  கோடி அரசு  அனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் மானிய கோரிக்கையாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் ரூ.1020.25 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. 15வது நிதிக்குழுவில் சுகாதார துறைக்கான மானியத்தை பயன்படுத்துவற்காக ரூ.8.05.93 கோடி அரசு அனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் ரூ.90 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

மீத தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும். 25.10.2021 முதல் 14.11.2021 வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் தற்காலிக சீரமைப்பு நடவடிக்கை மூலம் தொடர்புடைய துறைகளுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து 300 ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 2ம் கட்டத்தில் உடனடி செலவினங்களை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பங்கு மூலதன தொகையாக  ரூ.3 ஆயிரம் கோடி அனுமதிக்கப்பட்டு துணை மதிப்பீடுகளில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் கீழ் ரூ.1000 கோடி சேர்க்கப்பட்டுள்ளது

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில்  வளர்ச்சி பணி மற்றும் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் வழங்க தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு  வாரியத்துக்கு  அரசு ரூ.418.61 கோடி அரசு அனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் கீழ் ரூ.138.15  கோடி சேர்க்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கான நியாயமான மற்றும் ஆதாய விலை நிலுவை தொகை வழங்க 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு முன்பணமாக ரூ.182.14 கோடி அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதப்பீடுகளில் தொழில்துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

7.5 சதவீதம் முன்னுரிமை ஒதுக்கீட்டின் அடிப்படையில்  பொறியியல் கல்லூரியில் சேரும் அரசு  பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம், இதர கட்டணங்களுக்காக  ரூ.74.28 கோடி அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை துணை மதிப்பீடுகளில் உயர்கல்வி துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் செலுத்தக்கூடிய அனைத்து மாநில போக்குவரத்து  நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும்  தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு மிகை ஊதிய கருணை தொகை  வழங்குவதற்காக  அனைத்து மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு முன்பணமாக ரூ.97.75 கோடி அரசு அனுமதித்துள்ளது.

மறுவாழ்வு முகாம்களில் உள்ள 1896  இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு  வழங்குவதற்கு ரூ.8.66 கோடி அரசு அனுமதித்துள்ளது. இதற்கு முன்பணமாக  ரூ.7.15  கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்துணை மதிப்பீடுகள் திருத்த வரவு-செலவு  மதிப்பீடுகளில் மொத்த செலவீனத்தில் ஒரு சதவீதமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Minister ,Palanivel Thiagarajan ,Legislative Assembly , Rs 3,720 crore allocation in the supplementary budget for 2021-22: Minister Palanivel Thiagarajan files in the Legislative Assembly
× RELATED கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக...