×

கத்தியால் வெட்டி, நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் என்கவுன்டர்: வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் பேட்டி

செங்கல்பட்டு: கொலையாளிகள் கத்தியால் வெட்டி, நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் என்கவுன்டர் நடத்தப்பட்டதாக வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் கூறினார். செங்கல்பட்டில் பிரபல ரவுடிகள் 2 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் விரைந்தனர். அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி, கத்தியால் வெட்ட முயன்றபோது, போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பிரபல ரவுடிகளான மொய்தீன், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இவர்களது உடல்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. அந்த உடல்களை, வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா, எஸ்பி அரவிந்தன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். பின்னர் சந்தோஷ்குமார், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் 2 ரவுடிகள் நேற்று மாலை கொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய 3 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்ஐ தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றபள்ளி மலை பகுதியில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் ஏட்டுக்கள் சுரேஷ்குமார், பரத்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது, அவர்கள் கத்தியால் வெட்டினர். இதில் 2 ஏட்டுகளுக்கு தோள்பட்ைடயில் காயம் ஏற்பட்டது. மேலும் நாட்டு வெடிகுண்டுகளையும் வீசினர்.

இதில் தங்களை தற்காத்து கொள்ள இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் 4 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முக்கிய குற்றவாளியான அசோக் என்பவரது மனைவி ஜெர்சிகா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். இவர்களுக்கு நாட்டு வெடிகுண்டு எப்படி வந்தது, யார் சப்ளை செய்கிறார்கள் எனவும் விசாரிக்கின்றனர்.

2018ல் நடந்த காதல் தொடர்பான மோதலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கை வாபஸ் பெறும்படி மொய்தீன், தினேஷ் ஆகியோர் கூறியுள்ளனர். ஆனால், கார்த்திக், மகேஷ் மறுத்துள்ளனர். அதனால் இருவரையும் மொய்தீன், தினேஷ் ஆகியோர் தீர்த்து கட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 5 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மாவட்டத்தில் கொலை, கொள்ளையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக குற்றவாளிகள் கைது, குண்டர் தடுப்பு சட்டம், ஆர்டிஓ விசாரணைக்கு உள்படுத்துவது என பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீவிர ரோந்து பணியும் நடக்கிறது. இவ்வாறு ஐஜி கூறினார்.

Tags : Region ,IG Santoshkumar , Encounter due to stabbing and grenade attack: Interview with Northern Region IG Santoshkumar
× RELATED தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை...