கூட்டுறவு இயக்குநர் குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டாக குறைப்பு: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்; அதிமுக வெளிநடப்பு

சென்னை: கூட்டுறவு இயக்குநர் குழுவின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டமசோதா ஒன்றை தாக்கல் செய்து பேசினார். அந்த சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது: பொதுமக்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களில் விதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக பல புகார்கள் வரப்பெற்றுள்ளன.

கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள், ஆய்வு செய்யப்பட்டதில் அதிக அளவிலான நிதி முறைகேடுகளும், போலி நகைகள் மீதான கடன்கள் மற்றும் கோடிக்கணக்கில் போலி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது போன்றவை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, கூட்டுறவு சங்கங்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில், அவற்றின் நிர்வாகங்களை நெறிப்படுத்தவும், முறையான ஆளுகைகளை உறுதி செய்யவும், கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளின் திறனை அதிகரிக்கவும், சங்கங்களின் இயக்குநர்களின் குழுவின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க மற்றும் ஒரு சட்டத்தினை மேற்கொள்வதின் மூலம்,

வகை முறைகளுடன் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு முந்தைய 1983ம் ஆண்டு கூறப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தில் இருக்கும் சில வகை முறைகளை மீட்டு எடுக்கவும், அரசானது முடிவு செய்துள்ளது. இவ்வாறு சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தபோது இந்த சட்டத்தை எதிர்ப்பதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து இந்த சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Stories: