×

‘அடிக்கடி தாக்குதல் நடத்துகிறார்கள்’ கேரளாவை விட்டு வெளியேற போகிறேன்: பிந்து அம்மிணி பரபரப்பு பேட்டி

திருவனந்தபுரம்: சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய பிந்து அம்மிணி, தன்மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவதால் கேரளாவை விட்டு வெளியேற போவதாக தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணி, கனக துர்க்கா ஆகிய 2 இளம் பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சபரிமலையில் தரிசனம் செய்தனர்.

இதையடுத்து 2 பேருக்கும் கொலை மிரட்டல் வந்தன. இதையடுத்து 2 பேரும் பல மாதமாக தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் பிந்து அம்மிணிக்கு எதிராக சமீபத்தில் 2 முறை தாக்குதல் நடந்தது. நேற்று முன்தினம் கோழிக்கோட்டில் வைத்து மீண்டும் அவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பிந்து அம்மிணி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தாக்குதல் நடத்திய கோழிக்கோடு பேப்பூரை சேர்ந்த மோகன்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மோகன்தாசும் பிந்து அம்மிணி மீது புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிந்து அம்மிணி நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் என் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளது. என் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நான் பெண் என்பதாலும், ஒரு தலித் என்பதாலும் தான் தாக்குதல் நடத்தப்படுகிறது. சங் பரிவார் அமைப்புகள் தான் இதற்கு காரணம் ஆகும்.  எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கேரள போலீஸ் எனக்கு எந்த பாதுகாப்பும் தர வில்லை.

சபரிமலை சென்று வந்த பிறகு தாக்குதல் நடத்துவதால், எனக்கு பக்தர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. என் மீது தாக்குதல் அதிகரித்து வருவதால் கேரளாவில் தொடர்ந்து வாழ முடியாத நிலை உள்ளது. எனவே கேரளாவை விட்டு வெளியேற நான் தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kerala ,Bindu Ammini , ‘Frequent Attacks’ I am going to leave Kerala: Bindu Ammini sensational interview
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...