×

பொங்கல் பண்டிகையையொட்டி உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் பழைய தர்மபுரி, முத்துகவுண்டன் கொட்டாய், கடகத்தூர், சோகத்தூர், பாப்பாரபட்டி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதியில் கரும்பு உருண்டை வெல்லம் உற்பத்தி செய்வது பிரதான தொழிலாக இருக்கிறது. இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு ஆலையில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திராவிற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்ப, உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில், தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உருண்டை வெல்லம் தயாரிக்க தேவையான கரும்பு தர்மபுரி மாவட்டத்திலேயே கிடைக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ளதால், வெல்லம் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. தற்பொது உருண்டை வெல்லம் கிலோ ₹42க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிப்பம் ₹1260க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘கடகத்தூர், பாப்பாரப்பட்டி, சோகத்தூர் பகுதியில் 35க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் சிறு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதனை நம்பி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒருகிலோ வெல்லம் ₹52க்கு விற்கப்பட்டது. தற்போது உற்பத்தி அதிகரிப்பால், ₹42 ஆக விலை சரிந்துள்ளது,’ என்றனர்.

Tags : Pongal festival , Dharmapuri: Old Dharmapuri, Muthugaundan Kottai, Kadagathur, Sokathur, Paparapatti, Balakod, Papirettipatti, Dharmapuri district
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...