கொரோனா பரவலால் மேட்டூர் அணை பூங்கா மூடல்

மேட்டூர் : மேட்டூர் அணையையொட்டி மேட்டூர் அணை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் மேல் பூங்கா, கீழ் பூங்கா என்று அமைக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம். வார விடுமுறை நாட்களில் 10,000பேர் வரை கூடுவார்கள். ஆடிப்பெருக்கு போன்ற திருவிழா காலங்களில், 50ஆயிரத்திற்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் மேட்டூர் அணை பூங்காவில் மக்கள் நெரிசல் காணப்படும்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வியாழக்கிழமையான நேற்று முதல், மறு உத்தரவு வரும் வரை, மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை பூங்கா மூடப்பட்டது தெரியாமல் வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பூங்கா மூடப்பட்டதால் பூங்காவை சுற்றி உள்ள மீன் வறுவல் கடைகள், தள்ளுவண்டி கடைகள், சிற்றுண்டி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: