மாவட்டத்தில் 136 குழந்தை திருமணங்கள் நிறுத்தம்-கலெக்டர் தகவல்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், கடந்தாண்டில் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சிறுமியை 2வது திருமணம் செய்த, ஏற்கனவே திருமணம் ஆனவர் உட்பட 65 நபர்கள் மீது, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர், தங்கள் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். குறிப்பாக ஆசிரியைகள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவியர்களுக்கு குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தாலோ, தோழிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படுவது குறித்து தெரிநதால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் சிறுமியை இரண்டாவது திருமணம் செய்த, ஏற்கனவே திருமணம் ஆனவர் உட்பட 65 நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு, பிஆர்ஒ சீனிவாசன், தனிப்பிரிவு ஆய்வாளர் பாக்கியலட்சுமி, சமூகநலத்துறை கண்காணிப்பாளர் மோகனசுந்தரம், திட்ட ஒருங்கிணைப்பாளர் மேகநாதன் உள்ளிட்ட அரசுத்துறைகளின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: