வேலூரில் கொரோனா அதிகரிப்பு எதிரொலி நேதாஜி மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை-நேரில் ஆய்வு செய்த கமிஷனர் தகவல்

வேலூர் :  வேலூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேதாஜி மார்க்கெட்டை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் 700க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. காய்கறி கடைகள் அதிகாலை முதல் நள்ளிரவு வரை வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு அவற்றை மொத்தமாகவும், சில்லரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ஏராளமான மளிகை கடைகளும் உள்ளன. இவற்றிலும் அதிகாலை முதல் இரவு வரை வியாபாரம் நடக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் தற்போது தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களை பொருத்தவரை வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 150க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், நகர்நல அலுவலர் மணிவண்ணன், உதவி கமிஷனர் வசந்தி, இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நேற்று காலை திடீரென ஆய்வு செய்தனர்.

மார்க்கெட்டில் உள்ள காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், கிருபானந்த வாரியார் சாலை (லாங்கு பஜார்), புதிய மீன்மார்க்கெட் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் பாதைகள், கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா?, வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்துள்ளார்களா? என கண்காணித்தனர். முக கவசம் அணியாத வியாபாரிகளை கமிஷனர் எச்சரித்தார். பின்னர் கொரோனா முதல் மற்றும் 2வது அலையின்போது நேதாஜி மார்க்கெட் தற்காலிகமாக இயங்கிய மாங்காய் மண்டி பகுதியில் உள்ள மைதானத்தையும் கமிஷனர் பார்வையிட்டார்.

பின்னர் கமிஷனர் அசோக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மாநகராட்சி பகுதியில் தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 மற்றும் 2வது அலை காலக்கட்டத்தில் மேற்கொண்ட பணிகளின் அடிப்படையில் தற்போதும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி உள்ளிட்டவை தீவிரப்படுத்தப்படும்.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு தற்காலிகமாக மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று மேலும் அதிகரித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, ஆலோசனையை பெற்று மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்படும். இதுதொடர்பாக வியாபாரிகளிடமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: