முக கவசம் அணியாத 5 ஆயிரம் பேர் மீது வழக்கு-துணை போலீஸ் கமிஷனர் தகவல்

நெல்லை :  நெல்லையில் முக கவசம் அணியாத 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.நெல்லையில் கோவிட் தொற்று விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக வணிக நிறுவன உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் பேசியதாவது: கோவிட் தொற்று முன்பை விட வேகமாக பரவி வருகிறது. 24 மணி நேரத்திற்குள் தொற்று இரட்டிப்பாவதால் விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி உள்ளோம். நெல்லையில் முக கவசம் இல்லாமல் வாகனங்களில் பயணித்த 5 ஆயிரம் பேர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பலருக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

வணிக நிறுவனங்கள் முக கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். நிறுவன வாயிலில் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். கடைகளின் முன்பு சானிடைசர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவும். ஒமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. எனவே நம்மை பொறுத்தவரை வரும் முன் காப்பது நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.

இரவு 10 மணிக்குள் பாதயாத்திரையை முடிக்க வேண்டும்

கூட்டத்துக்கு பின்னர் நெல்லை  மாநகர போலீஸ் துணை கமிஷனர் டி.பி. சுரேஷ்குமார் (சட்டம்-ஒழுங்கு) அளித்த பேட்டியில் நெல்லை  மாநகர பகுதியில் 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, அரசின் வழிகாட்டி  நெறிமுறைகளின்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இரவு நேரத்தில் 10 மணிக்கு  வணிக நிறுவனங்கள் கடைகளை அடைக்கவேண்டும். பொதுமக்கள் இரவு நேர ஊரடங்கின்  போது வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பு  நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

உணவு, மெடிக்கல் உள்ளிட்ட அத்தியாவசியத்திற்காக அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே வெளியில் வரவேண்டும். தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம். பாதயாத்திரை பக்தர்கள்  ஊரடங்குக்கு முன்னதாக அதாவது இரவு 10 மணிக்கு முன்பு, பாதயாத்திரை பயணத்தை  முடித்து ஓய்வெடுக்கும் வகையில் திட்டமிடல் வேண்டும். ஊரடங்கு காலத்தின் போது பொதுமக்கள், தங்களை தற்காத்துக்  கொள்ள வீடுகளிலேயே இருக்கவேண்டும். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும் என்றார்.

அபராதத்துடன் 6 மாத சிறை

உயிருக்கு ஆபத்தான ஒரு நோய், பலருக்கு பரவும் என்று தெரிந்தே, சட்டத்திற்கு புறம்பான வகையிலோ அல்லது கவனக்குறைவாகவோ ஏதாவது ஒரு செயலைச் செய்தால் அவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்க வழி காட்டும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269ன் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம். கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் முககவசம் அணியாமல் செல்வோர் மீது தற்போது இந்த பிரிவின் கீழ்தான் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. எனவே முக கவசம் அணியாமல் சாலைகளில் சுற்றித்திரிவோர் எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது.

Related Stories: