ஜம்மு காஷ்மீரில் புட்காமில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதில், தீவிரவாதிகள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த அதிரடி இன்றும்  தொடர்ந்தது. புட்காம் மாவட்டத்தில் உள்ள சோல்வா க்ரல்போரா சதூரா பகுதியில்  தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததால், அங்கு விரைந்த வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளை சுற்றிவளைத்த வீரர்கள், அவர்களை சரணடையும்படி எச்சரித்தனர். ஆனால், அவர்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் தெரியவில்லை. இவர்கள் வைத்திருந்த ஏராளமான வெடிப்பொருட்கள், ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் மண்டலத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், விஜய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படை சுட்டு கொன்றது நினைவுக்கூரத்தக்கது.

Related Stories: