ரூ.3.10 கோடி மோசடி வழக்கில் கைது; மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திருச்சி சிறையில் அடைப்பு

விருதுநகர்: ஆவினில் வேலை தருவதாக ரூ.3.10 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் சுற்றிவளைத்து கைது செய்தனர். திருவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டப் பின், 15 நாள் நீதிமன்ற காவலில் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆவினில் வேலை தருவதாக ரூ.3.10 கோடி மோசடி தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தனிப்படை போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு 20 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர், கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசாரால் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்து தமிழக எல்லையில் ஓசூர் வரை காரில் கொண்டு வரப்பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு விருதுநகர் அழைத்து வரப்பட்டார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தனியாக 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். புகார் மனுவில் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், ‘‘யார், யாருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றார்கள், கடந்த 20 நாட்களாக தலைமறைவு வாழ்க்கைக்கு உதவியவர்கள் யார், யார்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தது. தொடர்ந்து டிஐஜி காமினி, எஸ்பி மனோகர் விசாரணை நடத்தினர். பின்னர் ராஜேந்திரபாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த பாஜ நிர்வாகி உள்ளிட்ட 4 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது.

அதிகாலை 4.30 மணியளவில் ராஜேந்திரபாலாஜியை, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ மற்றும் கொரோனா பரிசோதனை செய்தனர். பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு திருவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2ல் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அவர் ராஜேந்திரபாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்று பின்னர் அங்கிருந்து திருச்சி சிறைக்கு அழைத்து சென்றனர். ராஜேந்திரபாலாஜி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நள்ளிரவில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாக சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். பிரச்னை ஏற்படாமல் தடுக்க அனைவரும் கைது செய்யப்பட்டு, அதிகாலையில் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் முன்பாக முன்னாள் அமைச்சர் இன்பதமிழன் தலைமையில் குவிந்த அதிமுகவினர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

*4 பேர் ஜாமீனில் விடுவிப்பு: ராஜேந்திரபாலாஜியுடன் திருத்தங்கல் அதிமுக தகவல்நுட்ப பிரிவு பாண்டியராஜன், திருத்தங்கல் ரவிகணேஷ், கிருஷ்ணகிரி பாஜ மேற்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், அவரது டிரைவர் நாகேஷ் ஆகியோரையும் கைது செய்து நேற்று அதிகாலை 1.15 மணியளவில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவர்கள் மீது ராஜேந்திரபாலாஜி தப்பிப்பதற்கு உடந்தையாக இருந்ததாக ஐபிசி 212ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசாரே அவர்களை நேற்று மாலை ஜாமீனில் விடுவித்தனர்.

*மதுரை சிறையில் 30 நிமிடம் காத்திருப்பு: திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இருந்து ராஜேந்திரபாலாஜியை நேற்று காலை 11.30 மணிக்கு மதுரை மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவர், தான் முன்னாள் அமைச்சர், வருமானவரி செலுத்துபவர் என்பதால், தனக்கு முதல் வகுப்பு வழங்குமாறு விண்ணப்பித்தார். மதுரை சிறையில் அதிகமான கைதிகள் இருப்பதாலும், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காகவும் அவரை அங்கிருந்து திருச்சி சிறைக்கு மாற்ற மதுரை சிறைத்துறையினர் பரிந்துரை செய்தனர். இதனால் மதுரை சிறைக்குள் சுமார் அரை மணிநேரம் போலீஸ் வாகனத்தில் காத்திருந்தார். பின்பு போலீசார் பகல் 12.10 மணிக்கு அவரை வேனில் ஏற்றி பாதுகாப்புடன் அழைத்து சென்று, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: