தேனியில் மீன் கடைக்காரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர் கைது

தேனி: தேனியில் மீன்கடைக்காரரிடம்  ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம். இவர் தலைமையிலான குழு, நேற்று முன்தினம் தேனி நகராட்சி அருகே திருமலைபாண்டியன் என்பவரது மீன் கடைக்கு  ஆய்வுக்கு சென்றது. அப்போது கடை சுத்தம் இல்லாமலும், பழைய மீன் விற்பதாகவும் சண்முகம் கண்டித்துள்ளார். இதன் பின் மீன்கடைக்காரர் திருமலைபாண்டியனை தொடர்பு கொண்ட சண்முகம், அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.10 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் அவர் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை, உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் இருந்த சண்முகத்திடம், திருமலைபாண்டியன் அளித்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சண்முகத்தை பிடித்து, பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றையும், பிற ஆவணங்களையும் பரிசோதனை செய்தனர். இவ்விசாரணை 6 மணிநேரம் நடந்தது. இதனையடுத்து, ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிந்து உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகத்தை கைது செய்தனர்.

Related Stories: