ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் திடீர் முடிவு; 4 மாஜி முதல்வர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 4 முன்னாள் முதல்வர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பை திரும்ப பெறுவதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம் முடிவுaசெய்துள்ளது.  ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி ஜம்முவின் சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்தை திருத்தி அமைக்கும் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில், முன்னாள் முதல்வர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு ‘எஸ்எஸ்ஜி’ எனப்படும் ‘சிறப்பு பாதுகாப்பு படை’யின் பாதுகாப்பு வழங்கும் விதிமுறை நீக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 19 மாதங்களுக்கு பிறகு, இந்த 4 முன்னாள் முதல்வர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்முவில் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பை மேற்பார்வையிட்டு வரும் பாதுகாப்பு மறுஆய்வு ஒருங்கிணைப்பு குழு, இந்த முடிவை எடுத்துள்ளது.  

இந்த முடிவால், பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பை இழக்க உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இவர்களுக்கான இந்த பாதுகாப்பை திரும்ப பெறுவது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Related Stories: