×

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் ஒன்றிய செயலாளருடன் ஆணையம் ஆலோசனை

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது தொடர்பாக சுகாதார துறை செயலாளர் உள்ளிட்டோருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட்,கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், கொரோனா பரவல் அதிகமாகி வருவதால், இத்தேர்தல்கள் குறிப்பிட்ட காலத்தில் நடக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஆனால், தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயார்நிலையில் இருப்பதால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது.

கொரோனா நிலவரம் தொடர்பாக, ஏற்கனவே கடந்த மாதம் இறுதியில் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் உள்ள கொரோனா பாதுகாப்பு நிலைமை குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன். எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினர். அப்போது, தேர்தல் மாநிலங்களில் ஓட்டு போடும் தகுதி பெற்ற அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும்படி அவர் கேட்டு கெண்டார். இதனால், தேர்தலுக்கான அறிவிப்பை அடுத்த சில நாட்களில் தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

*உத்தரகாண்டில் நடக்குமா?: உத்தரகாண்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிடும்படி, இம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை நேற்று விசாரித்த  தலைமை நீதிபதி சஞ்சய் குமார் மிஸ்ரா, என்.எஸ்.தனிக் அமர்வு, ‘தலைவர்களின் பிரசார கூட்டங்களை காணொலி மூலமாக நடத்துவது பற்றியும், மக்கள் ஆன்லைனில் வாக்களிப்பது தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க வேண்டும்,’ என அறிவுறுத்தியது. ஏற்கனவே, உத்தர பிரதேச தேர்தலை ஒத்திவைக்கும்படி லக்னோ உயர் நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : 5 State Legislatures Commission ,Secretary of the Electoral Union , 5 State Legislatures Commission in consultation with the Secretary of the Electoral Union
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...