×

பெட்ரோல் விலை உயர்வால் கொந்தளிப்பு; கஜகஸ்தானில் மக்கள் வன்முறை; 12 போலீசார் உட்பட பலர் பலி: பிரதமர் மாமின் ராஜினாமா

மாஸ்கோ: கஜகஸ்தானில் திரவ பெட்ரோலிய எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இந்நாட்டு பிரதமர் அஸ்கர் மாமின் ராஜினாமா செய்தார். எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து 1991ம் ஆண்டு தனிநாடானது. இங்கு கார்களுக்கு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு தான் அதிகளவில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சூழலில் கஜகஸ்தான் அரசு இந்த எரிபொருள் விலையை சமீபத்தில் 2 மடங்கு உயர்த்தியது. இதனால் மக்கள் கொந்தளித்தனர். தலைநகர் நூர் சுல்தானிலும்   அல்மாட்டியிலும் போராட்டம் வெடித்தது. மேயரின் அலுவலகம் சூறையாடப்பட்டது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. இதில், 12 போலீசார் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ் அதிகாரியின் தலை துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். அந்த பகுதியே ரத்த களறியானது.

இதையடுத்து, முதல் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, தொடர் போராட்டம், வன்முறை காரணமாக கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அதிபர் டோகாயேவ், துணை பிரதமர் அலிகான் ஸ்மைலோவ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க உத்தரவிட்டார். அத்துடன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு மீதான விலையை குறைப்பதாகவும் அறிவித்தார்.

*களமிறங்கியது அமைதிப்படை : சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த அர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் ரஷ்யா தலைமையில், ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) என்ற ராணுவ கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பு தற்போது கஜகஸ்தான் வன்முறையை ஒடுக்குவதற்காக அங்கு சென்றுள்ளது.

Tags : Kazakhstan ,PM , Turmoil over rising petrol prices; Mass violence in Kazakhstan; 12 killed, including police: PM resigns
× RELATED தடைகளை தகர்த்து பாரிஸ் ஒலிம்பிக்...